டெல்லி அருண்ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தை ரூ.25 கோடி செலவில் புதுப்பிக்க முடிவு
அருண்ஜெட்லி ஸ்டேடியத்தை ஏறக்குறைய ரூ.25 கோடி செலவில் புனரமைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடக்கிறது. இதில் டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் 5 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அவற்றில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதலும் அடங்கும்.
இங்கு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட போட்டி நடந்த போது ஸ்டேடியத்தின் வளாகம் சுத்தமாக இல்லை. குறிப்பாக கழிவறைகள் சுகாதாரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியும் நடக்க இருப்பதால் ஸ்டேடியத்தை ஏறக்குறைய ரூ.25 கோடி செலவில் புனரமைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. மைதானத்தில் மொத்தமுள்ள 35 ஆயிரம் இருக்கைகளில் 10 ஆயிரம் இருக்கைகள் மாற்றப்படுகிறது.
கழிவறைகள் புதுப்பிப்பு, பெயிண்டிங் அடித்தல், டிக்கெட் வழங்குவதற்கான சாப்ட்வேர் மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள இருப்பதாக டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராஜன் மஞ்சந்தா தெரிவித்தார். 'போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சுத்தமான கழிவறை, உயர்தரமான உணவுகள் மற்றும் குறைவான விலையில் தண்ணீர் வழங்குவது அவசியம். அத்துடன் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.