விளையாட்டில் திறமையை வளர்த்தால் பெரிய இடத்தை அடையலாம் - முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்


விளையாட்டில் திறமையை வளர்த்தால் பெரிய இடத்தை அடையலாம் - முன்னாள் கிரிக்கெட் வீரர்  யூசுப்பதான்
x

விளையாட்டில் திறமையை வளர்த்தால் பெரிய இடத்தை அடையலாம் என்று சேலத்தில் கிரிக்கெட் பயிற்சி மையம் தொடக்க விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப்பதான் கூறினார்.

சேலம்,

சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் பள்ளி வளாகத்தில் பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் (CAP) 31-வது பயிற்சி மையம் தொடக்க விழா இன்று நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான யூசுப் பதான் கலந்து கொண்டு கிரிக்கெட் அகாடமி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கிரிக்கெட் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இது குறித்து கிரிக்கெட் வீரர் யூசுப்பதான் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிரிக்கெட் அகாடமி மையத்தில் 6 வயது முதல் 24 வயது வரை ஆண், பெண் இருபாலருக்கும் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினை சேர்ந்தவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கப்படும்.

அதிநவீன பயிற்சி முறைகள் பயன்படுத்தி உயர்தர கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும். இளம் விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட்டை தேர்வு செய்தது மிகச்சிறந்தது. விளையாட்டில் கடுமையான பயிற்சி மேற்கொண்டு திறமையை வளர்த்து கொண்டால் பெரிய இடத்தை அடையலாம்.

சிறிய கிராமத்தில் இருந்து நடராஜன் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில் முறையான பயிற்சி கிடைக்காமல் ஏராளமான இளம் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து பயிற்சி அளித்து கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு இளம் விளையாட்டு வீரர்களை அழைத்து செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சேலம் இளைஞர்களிடம் இன்னும் அடையாளம் காணப்படாத, ஆராயப்படாத திறமைகள் நிறைய உள்ளன. கிரிக்கெட் விளையாட்டு என்பது உங்கள் உடல் எவ்வளவு நன்றாக விளையாடுகிறது என்பது மட்டுமல்ல, நமது மனம் எவ்வளவு நன்றாக தயாராக உள்ளது என்பதும் தான்.

இந்த பயிற்சி மையம் கிராமப்புற இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். விளையாட்டில் முயற்சியுடன் ஈடுபட்டால் சாதிக்கலாம்.

இவ்வாறு யூசுப் பதான் கூறினார்.


Next Story