கடைசி டெஸ்ட் போட்டி : இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி..!!


கடைசி டெஸ்ட் போட்டி : இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி..!!
x

Image Tweeted By @ICC 

தினத்தந்தி 5 July 2022 4:38 PM IST (Updated: 5 July 2022 4:49 PM IST)
t-max-icont-min-icon

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

பர்மிங்கம்,

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பேரிஸ்டோவ் அதிகபட்சமாக 106 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 132 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.

இதனை தொடர்ந்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ரூவ்லி களமிறங்கினர். இரு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாக் க்ரூவ்லி 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஒலிவ் போப் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

ஆனால், அடுத்துவந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பிரிஸ்டோவ் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 76 ரன்னுடனும், பேரிஸ்டோவ் 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக விளையாடிய ரூட் டெஸ்ட் அரங்கில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது. ஜோ ரூட் 142 ரன்களுடனும் பேர்ஸ்டோவ் 114 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் டிரா செய்தாலே இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த தோல்வியினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

1 More update

Next Story