3வது ஆஷஸ் டெஸ்ட்டில் தோல்வியடைந்தபோதும் தொடரில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா...!


3வது ஆஷஸ் டெஸ்ட்டில் தோல்வியடைந்தபோதும் தொடரில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா...!
x
தினத்தந்தி 9 July 2023 8:15 PM IST (Updated: 9 July 2023 8:17 PM IST)
t-max-icont-min-icon

3வது ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிபெற்றபோதும் தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

லீட்ஸ்,

உலகின் மிகவும் பிரபலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடராகும். 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கடந்த 6ம் தேதி தொடங்கியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில், வெற்றிக்கு இன்னும் 225 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. அதேவேளை, 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

இங்கிலாந்து 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட் வீழ்ந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 171 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை தொடர்ந்து கிறிஸ் ஓக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த ஹேரி புரூக் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவர் 93 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 254 ரன்களை எட்டியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற நிலையில் உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் இங்கிலாந்து 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.


Next Story