இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது - மெக்கல்லம்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது - மெக்கல்லம்
x

image courtesy;AFP

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக மெக்கல்லம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

முன்னதாக பேஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இத்தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்ததை இங்கிலாந்து செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தேவைப்படும் நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாத இங்கிலாந்து அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து தொடரை இழந்துள்ளது. அதனால் பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை தொடர்ந்து இந்திய தொடரிலும் தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக மெக்கல்லம் கூறியுள்ளார். ஆனால் 18 மாதங்களுக்கு முன் சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவதற்கு தடுமாறிய இங்கிலாந்து அணி தற்போது பன்மடங்கு உயர்ந்து கடைசி 8 தொடர்களில் 4 வெற்றி 3 டிராவை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே தம்முடைய தலைமையில் இங்கிலாந்து அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பெருமிதத்தை வெளிப்படுத்தும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"நாங்கள் இங்கே தோற்றுள்ளோம். 2 - 2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடர் டிரா ஆனது. ஆனால் 18 மாதங்களுக்கு முன்பிருந்த அணியை விட தற்போது நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். எனவே அடுத்த 18 மாதங்கள் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்கள் சில ஸ்பெஷலானதை சாதிப்போம். எங்களுடைய அணியில் இருக்கும் சில குறைகளை தொடர்ந்து நாங்கள் உளியை வைத்து சரி செய்கிறோம். இந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருப்பது மோசமல்ல" என்று கூறினார்.


Next Story