நெதர்லாந்தை துவம்சம் செய்த ஜாஸ் பட்லர் - ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை


நெதர்லாந்தை துவம்சம் செய்த ஜாஸ் பட்லர் - ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை
x

Image Courtesy : Twitter @@englandcricket

தினத்தந்தி 17 Jun 2022 1:34 PM GMT (Updated: 17 Jun 2022 1:52 PM GMT)

அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்,

ஆம்ஸ்டெல்வீன்,

நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீன்-யில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக ஜேசன் ராய் - பில் சால்ட் களமிறங்கினர். ஜேசன் ராய் 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலான் - சால்ட் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

சால்ட் 93 பந்துகளில் 122 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் - லிவிங்ஸ்டன் ஜோடி மீண்டும் நெதர்லாந்து அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்தனர். அதிரடியாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் குவித்தது. லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து உலக அணி சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்ததே ஒருநாள் போட்டியில் உலக சாதனையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சாதனையை மீண்டும் இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story