சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் பெரிய தோல்வி..!


சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் பெரிய தோல்வி..!
x

image courtesy: England Cricket twitter

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது.

மும்பை,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.

இங்கிலாந்து அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 3 ஆட்டங்களில் ஆடாத பென் ஸ்டோக்ஸ் உடல் தகுதியை எட்டியதால் திரும்பினார். லியாம் விலிங்ஸ்டன் நீக்கப்பட்டார். சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக டேவிட் வில்லி, அட்கின்சன் இடம் பெற்றனர். தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா உடல் நலக்குறைவு காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தொடக்க வீரர் ரீஜா ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். மார்க்ரம் கேப்டன் பதவியை கவனித்தார்.

'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய குயின்டான் டி காக் முதல் ஓவரில் ரீஸ் டாப்லே வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். அவரது அடுத்த பந்தையும் வேகமாக விளாசிய டி காக் (4 ரன்) விக்கெட் கீப்பர் பட்லரிடம் சிக்கினார். அதற்கு முதலில் நடுவர் அவுட் கொடுக்காததால் இங்கிலாந்து அணியினர் அப்பீல் செய்து சாதகமான முடிவை பெற்றனர்.

இதனையடுத்து வான்டெர் டஸன், ரீஜா ஹென்ரிக்சுடன் கைகோர்த்தார். முதலில் நிதானத்தை கடைப்பிடித்த இருவரும் பிறகு வேகமாக மட்டையை சுழற்றினர். வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்த வான்டெர் டஸன் 14-வது அரைசத்தையும், ரீஜா ஹென்ரிக்ஸ் 7-வது அரைசதத்தையும் ஒரே ஓவரில் கடந்தனர்.

ஸ்கோர் 125 ரன்னை (19.4 ஓவரில்) எட்டிய போது வான்டெர் டஸன் 60 ரன்னில் (61 பந்து, 8 பவுண்டரி) அடில் ரஷித்தின் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடுகையில் மிட் விக்கெட் திசையில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஜோ ரூட் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் தூக்கிய ரீஜா ஹென்ரிக்ஸ் (85 ரன்கள், 75 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) அடில் ரஷித் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து களம் புகுந்த ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடினார். இதனால் ரன் விகிதம் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய மார்க்ரம் 42 ரன்னில் (44 பந்து, 4 பவுண்டரி) ரீஸ் டாப்லே பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டேவிட் மில்லர் (5 ரன்), ஜெரால்டு கோட்ஜி (3 ரன்) நிலைக்கவில்லை.

காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்புக்கு சிகிச்சை எடுத்து கொண்டு ஆடிய ஹென்ரிச் கிளாசென் எல்லாவகையான பந்து வீச்சையும் நாலாபுறமும் விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவருடன் இணைந்த மார்கோ யான்செனும் அதிரடியில் ஈடுபட்டதால் ரன் மளமளவென்று உயர்ந்தது. 61 பந்துகளில் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்த ஹென்ரிச் கிளாசென் (109 ரன்கள், 67 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி ஓவரில் அட்கின்சனின் யார்க்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இந்த ஆண்டில் கிளாசென் அடித்த 3-வது சதம் இதுவாகும். கிளாசென்-யான்சென் இணை 151 ரன்கள் திரட்டியது.

50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 143 ரன்கள் திரட்டியது. ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். அட்கின்சன், ரீஸ் டாப்லே ஓவர்களில் முறையே தலா 2, 3 சிக்சர்கள் தூக்கி அசத்திய மார்கோ யான்சென் 75 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதலாவது அரைசதம் அடித்த மார்கோ யான்சென் ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லே 3 விக்கெட்டும், அட்கின்சன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுப்போல மளமளவென்று சரிந்தது. 22 ஓவர்களில் இங்கிலாந்து அணி 170 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க்வுட் ஆட்டம் இழக்காமல் 43 ரன்னும், அட்கின்சன் 35 ரன்னும் எடுத்தனர். காயம் காரணமாக ரீஸ் டாப்லே பேட்டிங் செய்யவில்லை. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்டு கோட்ஜி 3 விக்கெட்டும், இங்கிடி, மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். சதம் அடித்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

4-வது ஆட்டத்தில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது வெற்றியை ருசித்தது. இங்கிலாந்துக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.

இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 221 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே அந்த அணியின் பெரிய தோல்வியாக இருந்தது. மேலும் உலகக் கோப்பை தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணி ரன் வித்தியாசத்தில் கண்ட 2-வது மோசமான தோல்வியாகவும் இது பதிவானது. இந்த வகையில் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் 257 ரன் வித்தியாசத்தில் தோற்றதே மோசமான தோல்வியாக உள்ளது.


Next Story