இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சாளர்...வரலாறு படைத்த உம்ரான் மாலிக் - எவ்வளவு வேகம் தெரியுமா?


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சாளர்...வரலாறு படைத்த உம்ரான் மாலிக் - எவ்வளவு வேகம் தெரியுமா?
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 4 Jan 2023 9:04 AM GMT (Updated: 4 Jan 2023 9:06 AM GMT)

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான நேற்று நடைபெற்ற முதலாவது 20 ஓவர் போட்டியில் உம்ரான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மும்பை,

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா (41 ரன்கள்), அக்சர் பட்டேல் (31 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா எளிதாக வெற்றி பெற்று விடும் என நினைத்த வேளையில் அந்த அணியின் கேப்டன் ஷனகா அதிரடியாக ஆடி வெற்றியை தங்கள் பக்கம் எடுத்து சென்றார்.

16 ஓவர் முடியும் போது அதிரடியாக ஆடிய ஷனகா 23 பந்தில் 39 ரன்கள் அடித்திருந்தார். இதையடுத்து ஆட்டத்தின் 17வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஷனகா 0,6,0 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த ஓவரின் 4வது பந்தில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த பந்தை உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் வீசி அசத்தினார்.

இது போட்டியின் வேகமான பந்தாகவும் இருந்தது. 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த ஷனகாவை உம்ரான் இந்த பந்தின் மூலம் வெளியேற்றினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை இவர் தற்போது முறியடித்தார். இதுவரை அதிவேகமாக ப்ந்து வீசியவர்களில் பும்ரா அதிகபட்ச வேகம் மணிக்கு 153.36 கி.மீ. ஆகும். அதற்கு அடுத்த இடங்களில் ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் உள்ளனர்.




Next Story