ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம்..! சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
கொல்கத்தா,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்
ராஜஸ்தான் அணியில் அதிரடியில் மிரட்டிய ஜெய்ஸ்வால் , கொல்கத்தா அணி கேப்டன் ராணா வீசிய முதல் ஓவரில் 26 ரன்கள் எடுத்தார் தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய ஜெய்ஸ்வால் கொல்கத்தா அணியினரின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். 13 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கே.எல்.ராகுல் , பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தனர் . இதனை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.