முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு


முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு
x

Image Courtacy: BCCITwitter

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

முதலில் ஒரு நாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ந்தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் நிலையான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் சீரான வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

பின்னர் இந்த ஜோடியில் சுப்மன் கில் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகார் தவான் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் 97 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரத்தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன்களும், சஞ்சு சாம்சன் 12 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 21 ரன்களும், தீபக் ஹூடா 27 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

முடிவில் ஷர்துல் தாக்கூர் 7 ரன்களும், முகமது சிராஜ் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜோசப் மற்றும் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story