டபிள்யூ.பி.எல். கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீராங்கனை - தாரா நோரிஸ் சாதனை
டபிள்யூ.பி.எல். கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீராங்கனை என்ற சாதனையை தாரா நோரிஸ் படைத்தார்.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது லீக்கில் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.
இதில் 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் மந்தனா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது.
அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீராங்கனைகள் சோபி டெவின் (14 ரன்), கேப்டன் மந்தனா (35 ரன்) இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் அலிஸ் கேப்சி வெளியேற்றினார்.
அதைத் தொடர்ந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அமெரிக்காவைச் சேர்ந்த தாரா நோரிஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூருவை சீர்குலைத்தார். இதில் எலிஸ் பெர்ரி (31 ரன்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (2 ரன்), ஹீதர் நைட் (34 ரன்) ஆகியோரும் அடங்குவர்.
சரிவில் இருந்து நிமிர முடியாமல் திணறிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி எளிதில் வெற்றி பெற்றது.
4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 24 வயதான தாரா நோரிஸ் ஆட்டநாயகி விருதை பெற்றார். டபிள்யூ.பி.எல். கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்த டெல்லி இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தாரா நோரிஸ் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.