முதலாவது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து - இலங்கை இடையே இன்று 3-வது நாள் ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை 355 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளில் 6 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்து இருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா (39 ரன்), கசுன் ரஜிதா (16 ரன்) களத்தில் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் இன்னிங்சில் 92.4 ஓவர்களில் 355 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தனஞ்ஜெயா டி சில்வா 46 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுதி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் சவுதி ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 15-வது முறையாகும்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டிவான் கான்வே களம் புகுந்தனர். இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். இதனால் இருவரும் தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். ஸ்கோர் 67 ரன்னை எட்டிய போது கான்வே (30 ரன்கள்) அசிதா பெர்னாண்டோ பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் (1 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (2 ரன்) வந்த வேகத்திலேயே லாஹிரு குமராவின் பந்து வீச்சில் நடையை கட்டினர். இதற்கு மத்தியில் நிதானமாக ஆடி 27-வது அரைசதம் அடித்த டாம் லாதம் 67 ரன்னில் (144 பந்து, 7 பவுண்டரி) போல்டு ஆனார். விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் (7 ரன்) நிலைக்கவில்லை.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 63 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 40 ரன்னுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 193 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இன்று 3-வது நாளில் தொடர்ந்து ஆடுகிறது.