உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 3 இடக்கை பேட்ஸ்மேன்கள் இடம் பெற வேண்டும்- ரவி சாஸ்திரி
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங்கில் டாப்-7 வரிசையில் 3 இடக்கை ஆட்டக்காரர்கள் இடம் பெற வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். இடக்கை பேட்ஸ்மேன்கள் எப்போதும் அணிக்கு சரியான கலவையை வழங்கக்கூடியவர்கள்.
ஒரு இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். மற்ற இரு இடக்கை ஆட்டக்காரர்களை அடையாளம் காண்பது தேர்வாளர்களின் பணி. அண்மை காலத்தில் யார்-யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை தேர்வு குழுவினர் கவனித்து இருப்பார்கள். இளம் இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அருமையாக விளையாடினார். அவர் பேட்டிங் செய்த விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. இதே போல் ஜெய்ஸ்வாலும் சிறப்பாக ஆடுகிறார். அவர்களை ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இணைக்க வேண்டும். இதே போல் இஷான் கிஷன் கடந்த 6-8 மாதங்களாக தொடர்ந்து அணியில் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்கிறார். அவரையும் அணிக்கு தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.
இந்தியாவின் பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் விராட் கோலியை பேட்டிங்கில் 4-வது வரிசையில் பயன்படுத்தலாம். 4-வது வரிசையில் கோலியின் சாதனை மகத்தானது.
லோகேஷ் ராகுல் காலில் அடைந்த காயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவர் கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் ஆசிய கோப்பை போட்டிக்கான லெவனில் இடம் பிடிப்பது நிச்சயம் கடினம் தான். காயத்தில் இருந்து குணமடைந்து வந்தாலும் உடனே அவரது பேட்டிங் திறனை பழைய நிலைக்கு கொண்டு வருவது முடியாத காரியம். காயமடைந்த வீரர்களை அவசரகதியில் அணிக்குள் இழுக்க கூடாது. காயத்தில் சிக்கிய ஜஸ்பிரித் பும்ரா ஒன்றல்ல, இரண்டல்ல 3 முறை திரும்ப அழைக்கப்பட்டார். விளைவு காயத்தன்மை பெரிதாகி ஏறக்குறைய ஒரு ஆண்டு விளையாட முடியாமல் போனது.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.