ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார் - சோகத்தில் கிரிக்கெட் உலகம்


ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார் - சோகத்தில் கிரிக்கெட் உலகம்
x

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

ஹராரே,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ரவிச்சந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் போன்ற இந்திய நட்சத்திரங்களும் உயிரிழந்த அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் செய்திகளை டுவிட்டரில் பதிவிட்டனர்.

இதையடுத்து ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்தார். இதையடுத்து பல வீரர்கள் இரங்கல் வெளியிட்ட தங்களது டுவிட்டர் பதிவுகளை நீக்கினர்.

இந்நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் இன்று காலை உயிரிழந்ததாக அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இன்று அதிகாலையில், என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பு மற்றும் என் அழகான குழந்தைகளின் தந்தை, தனது வீட்டில் இருந்து தேவதூதர்களுடன் இருக்க அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக அவரது மனைவியே தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மிக முக்கிய வீரராக பார்க்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் கடந்த 1993ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அவர் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார்.

65 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1990 ரன்களும், 216 விக்கெட்டுகளும், 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2943 ரன்களும், 239 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

வங்காளதேசம், ஜிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.




Next Story