பேட்டிங்கில் அசத்தினால் உலகக் கோப்பை கிடைக்கும் - கங்குலி சொல்கிறார்


பேட்டிங்கில் அசத்தினால் உலகக் கோப்பை கிடைக்கும் - கங்குலி சொல்கிறார்
x

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பேட்டிங்கில் அசத்த வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா உலகக் கோப்பையை வென்று 10 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதே என்று கேட்கிறீர்கள். நீங்கள் எல்லாநேரமும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. இதில் மோசமான நாட்கள் இருக்கும். பெரிய இடைவெளி விழும். இது எல்லாம் சகஜம். விரைவில் சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளது. இதில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நமது வீரர்கள் பேட்டிங்கில் அசத்த வேண்டும்.

உலகக் கோப்பை கிரிக்கெட், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அதை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு தொடரிலும் குறிப்பிட்ட தருணத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே முடிவு அமையும். இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. ஆனால் உலகக் கோப்பை போட்டியின் போது நன்றாக விளையாடியாக வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது பேட்டிங் திறனே காரணம். இதை நல்ல முடிவு என்றே சொல்வேன். ஆனால் 17 பேர் கொண்ட அணியில் யாராவது காயமடைந்தால் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

ஆசியக் கோப்பை போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் சிறந்த அணி. ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சரியான கலவையில் அந்த அணி உள்ளது. இதே போல் இந்தியாவும் பலமிக்க அணி தான். குறிப்பிட்ட நாளில் எப்படி நெருக்கடியை சமாளித்து ஆடுகிறார்கள் என்பதே முக்கியம்.

இவ்வாறு கங்குலி கூறினார்.


Next Story