எனக்கு மிகவும் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான்....ஏனெனில் அவர் வித்தியாசமானவர்... - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்


எனக்கு மிகவும் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான்....ஏனெனில் அவர் வித்தியாசமானவர்... - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்
x

கோப்புபடம்

தனக்கு மிகவும் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தனது கருத்தை கூறியுள்ளார்.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் தனக்கு பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

எங்களுடைய காலங்களில் இந்தியாவைப் பற்றி பேசும் போது உடனடியாக சுழல் பந்து வீச்சாளர்களை தான் குறிப்பிட்டு பேசுவோம். ஆனால் அவர்களும் சில தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளார்கள்.

குறிப்பாக கபில் தேவ் ஒரு மகத்தான ஆல்-ரவுண்டர். அந்த வரிசையில் தற்போது பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் போன்ற சிறப்பான வீரர்கள் வந்துள்ளனர். அதில் பும்ராவை நான் அதிகமாக விரும்புகிறேன். ஏனெனில் அவர் வித்தியாசமானவர்.

அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களைப் போல் அதிக தூரம் ஓடி வந்து இதர அம்சங்களை பின்பற்றுவதில்லை. மாறாக சற்று நடந்து குறைவான தூரம் ஓடி வந்து பந்தை வீசுகிறார்.

அவ்வாறு வீசுவது முற்றிலும் வித்தியாசமானதாக இருப்பதுடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அது தான் அவருடைய ஸ்டைல். அது அவருக்கு மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது.

மேலும் இந்தியா மட்டுமல்லாமல் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த நாட்டில் இருந்து சிறப்பாக செயல்பட்டாலும் நான் மகிழ்ச்சியடைவேன். அவர்கள் தங்களுடைய நாடு பெருமைப்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டால் நானும் பெருமையடைவேன்.

ஏனெனில் தற்போதைய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் அசத்த முடிவதில்லை. பிட்ச்களும் தற்போது சாதகமாக அமைக்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story