சுப்மன் கில்லின் உடல்நலம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த தகவல்


சுப்மன் கில்லின் உடல்நலம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த தகவல்
x

சுப்மன் கில் நேற்று இருந்ததை விட இன்று நலமுடன் உள்ளார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

சென்னை,

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனிடையே, முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து, பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சுப்மன் கில் நல்ல பார்மில் இருந்தார். உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது. "சுப்மன் கில் நேற்று இருந்ததை விட இன்று நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இருந்து அவரை இன்னும் விலக்கவில்லை. எங்களுக்கு இன்னும் 36 மணிநேரம் உள்ளது. அவர் எப்படி உணருகிறார் என்பதை நாளை மறுநாள் பார்ப்போம்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story