'இந்திய அணியில் ராகுலுக்கு இடம் நீதி மீதான நம்பிக்கையை அசைக்கிறது' - வெங்கடேஷ் பிரசாத் கடும் விமர்சனம்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
டெல்லி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
முதல் டெஸ்ட்டில் 20 ரன்களும் இரண்டாவது டெஸ்ட்டில் 18 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தார். இந்த தொடருக்கு முந்தைய ஆட்டங்களிலும் கேஎல் ராகுல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கேஎல் ராகுலின் மோசமான பேட்டிங் தொடர்பான தரவுகள் அடங்கிய டுவிட்டை ரிடுவிட் செய்த வெங்கடேஷ் பிரசாத், நாட்டில் மிகத்திறமையான பேட்டிஸ்மேன்கள் இருந்தபோதும் 2-வது டெஸ்ட் தொடக்க வீரராக அவர் அணி நிர்வாகத்தால் பரீசிலிக்கப்படுகிறார். கேஎல் ராகுலின் திறனை நான் மதிக்கிறேன். ஆனால், அவரின் ஆட்டம் சராசரியை விட குறைவாக உள்ளது.
8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் 46 டெஸ்ட்கள் விளையாடி 34 ரன்கள் சராசரியாக கொண்டிருப்பது சாதாரணம். இதுபோன்று நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேறொரு நபரை நான் நினைத்துபார்த்ததில்லை. இவ்வாறான குறைந்த சராசரியுடன் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் மேல்வரிசை வீரர்கள் யாரும் விளையாடியதில்லை. இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு இடம் கொடுத்திருப்பது நீதி மீதான நம்பிக்கையை அசைக்கிறது. கேஎல் ராகுலின் தேர்வு அவரது ஆட்டத்தை அடிப்படையாக கொண்டதல்ல... அவருக்கு ஆதரவாக கொண்டது' என்றார்.