நான் இல்லை... ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது அவர்தான் - ஜெய் ஷா


நான் இல்லை... ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது அவர்தான் - ஜெய் ஷா
x

ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் ஆகியோரை பி.சி.சி.ஐ. மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கியது தானில்லை ஜெய் ஷா தெரிவித்துள்ளார்

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 - 24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. அதோடு அவர்கள் குறித்த விவாதமும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. ஐயர், இஷான் கிஷன் இருவருமே ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்த காரணத்தினாலே பி.சி.சி.ஐ. அவர்கள் மீது இந்த அதிரடியான நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் முதல்தர கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ. எடுத்த இந்த நடவடிக்கை சரியான ஒன்றுதான் என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கூறியிருந்தனர். அப்போது மத்திய சம்பள ஒப்பந்தத்தில் ஒப்பந்தமாகியுள்ள அனைத்து வீரர்களும் பிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வெளிப்படையாக கேட்டுக்கொண்டார்.

அப்போதும் இஷான் கிஷன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. மறுபுறம் இங்கிலாந்து தொடரில் காயமடைந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவரும் அதைக் கேட்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் இந்த இருவரையும் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியது. அதன்பின் ஸ்ரேயாஸ் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மும்பை அணிக்காக களமிறங்கி விளையாடினார்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் ஆகியோரை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்தான் பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்திலிருந்து நீக்கியதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

" இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அஜித் அகர்கரின் முடிவு. செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலை. புதிதாக இணைக்கப்பட்ட சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தவிர்க்க முடியாதவர்கள்.

அதேபோல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னை பி.சி.சி.ஐ. கருதினால் நான் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட தயாராக இருப்பதாக ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். இந்தியாவுக்காக விளையாட அதற்கு தகுந்த உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும்.

இந்திய அணியில் இடம் பிடிக்காத இஷான் கிஷன் போன்ற வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் வீரராக விளையாடலாம். ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு நீங்கள் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு திறமையை நிரூபிக்க வேண்டும். அதை சரியாக செய்பவர்களையே சரியான வீரர்களாக கருதுவோம். மும்பை போட்டி முடிந்ததும் இஷான் கிஷனிடம் மற்ற வீரர்களை போலவே நான் நட்பாக பேசினேன். வேறு எதுவுமில்லை" என்று கூறினார்.


Next Story