'தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன்' - லக்னோ அணியின் கேப்டன் குருணல் பாண்ட்யா வேதனை


தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன் - லக்னோ அணியின் கேப்டன் குருணல் பாண்ட்யா வேதனை
x

Krunal Pandya (image courtesy: iplt20.com via ANI)

வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன் என்று லக்னோ அணியின் கேப்டன் குருணல் பாண்ட்யா வேதனையுடன் தெரிவித்தார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றை எட்டியது. அத்துடன் லக்னோ அணிக்கு எதிரான முந்தைய 3 ஆட்டங்களிலும் கண்டு இருந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 69 ரன்களுடன் (8.1 ஓவர்) வலுவான நிலையில் இருந்த லக்னோ அணி கடைசி 32 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தொடர்ந்து 2-வது ஆண்டாக வெளியேற்றுதல் சுற்றுடன் நடையை கட்டியது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் பந்து வீசி 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஐ.பி.எல். 'பிளே-ஆப்' சுற்று ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்த மத்வால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

8 ரன்னில் கேட்ச் ஆன லக்னோ அணியின் கேப்டன் குருணல் பாண்ட்யா தோல்விக்கு பிறகு கூறுகையில் 'ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். நான் ஒரு தவறான ஷாட் ஆடி ஆட்டம் இழந்தேன். அதில் இருந்து தான் எங்கள் அணி சரிவை நோக்கி சென்றது. அந்த தருணத்தில் நான் அந்த மாதிரியான ஷாட்டை ஆடி இருக்கக்கூடாது. இதனால் தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஆடுகளத்தின் தன்மை ஒரே மாதிரி தான் இருந்தது. பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. நாங்கள் நேர்த்தியாக பேட்டிங் செய்து இருக்க வேண்டும். 'டைம்-அவுட்' இடைவெளிக்கு பிறகு நாங்கள் நன்றாக கிரிக்கெட் ஆடவில்லை.

குயின்டான் டி காக் தரமான பேட்ஸ்மேன். அவரை வெளியே உட்கார வைத்தது கடினமான முடிவு. ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் கைல் மேயர்ஸ் நன்றாக விளையாடி இருக்கிறார். இதனால் தான் குயின்டான் டி காக்கை விடுத்து கைல் மேயர்சுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திறம்பட விளையாடக்கூடியவர்கள். எனவே தான் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து பந்து வீச்சை தொடங்கினேன்' என்றார்.

ஆட்டநாயகனாக ஜொலித்த ஆகாஷ் மத்வால் கூறுகையில், 'நான் நிறைய பயிற்சியை மேற்கொண்டு எனது வாய்ப்புக்காக காத்து இருந்தேன். என்ஜினீயரிங் படித்து இருக்கும் எனக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உண்டு. டென்னிஸ் பந்தில் விளையாடதொடங்கிய நான் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். 'யார்க்கர்' பந்து வீசுவது எனது பலமாகும். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அணியின் தேவைக்கு தகுந்தபடி எனக்கு புதிய பந்தில் பந்து வீச வாய்ப்பு அளித்ததுடன் நல்ல ஊக்கமும் அளித்தார். வரும் ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அத்துடன் சாம்பியனாக போட்டியை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

இந்த ஆட்டத்தில் நிகோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு மாற்றாக நான் கிடையாது. என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதனை செய்ய முயற்சிக்கிறேன்' என்றார். உத்தரகாண்ட்டை சேர்ந்த 29 வயதான மத்வாலை ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணி நிர்வாகம் வாங்கியிருந்தது நினைவு கூரத்தக்கது.


Next Story