'இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை' - மேத்யூஸ் டைம்டு அவுட் குறித்து ஷகிப் கருத்து


இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை - மேத்யூஸ் டைம்டு அவுட் குறித்து ஷகிப் கருத்து
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 7 Nov 2023 2:38 AM GMT (Updated: 7 Nov 2023 2:56 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.

டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 279 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 282 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆட்டம் முடிந்த பின்னர் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது,

இப்போது நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் பீல்டர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து நான் நடுவரிடம் முறையிட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேனா அல்லது திரும்ப பெறுவேனா என என்னிடம் நடுவர்கள் கேட்டார்கள்.

இந்த வகை அவுட் கிரிக்கெட் விதிகளில் உள்ளது. அது சரியா, தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக நான் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது. இது குறித்த விவாதங்கள் இருக்கும். ஆனால், அது விதிகளில் உள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதில் எனக்கு கவலையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story