முதல் சம்பளத்தில் குடும்பக் கடனை அடைத்தேன்...அம்மாவிற்கு புது நகைகள் வாங்கி கொடுத்தேன் - துருவ் ஜூரெல்


முதல் சம்பளத்தில் குடும்பக் கடனை அடைத்தேன்...அம்மாவிற்கு புது நகைகள் வாங்கி கொடுத்தேன் - துருவ் ஜூரெல்
x

image courtesy: PTI

எளிய பின்னணியில் இருந்து வந்த துருவ் ஜூரெலின் கிரிக்கெட் கனவிற்கு குடும்பத்தினர் அதிகளவு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் துருவ் ஜூரெல். அந்த தொடரின் 4-வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இவரது ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர், அடுத்த எம்.எஸ். தோனி உருவாகி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் கவனத்தை ஈர்த்த துருவ் ஜூரெல், ராஜஸ்தான் அணியின் சிறந்த பினிஷராகவும் பார்க்கப்பட்டார். எளிய பின்னணியில் இருந்து வந்த துருவ் ஜூரெலின் கிரிக்கெட் கனவிற்கு குடும்பத்தினர் அதிகளவு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தரமான கிரிக்கெட் கிட்டினை வாங்குவதற்காக துருவ் ஜூரெலின் அம்மா, நகையை அடமானம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் வாங்கிய முதல் சம்பளம் குறித்து துருவ் ஜூரெல் பேசுகையில், 'எனது கிரிக்கெட் லட்சியத்திற்காக குடும்பத்தினர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்காகவே அதிகமாக கடன் வாங்கி இருந்தார்கள். அந்த சூழலில்தான் 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.

அந்த பணம் கையில் கிடைத்தவுடன் குடும்பத்தின் மொத்த கடனையும் அடைத்துவிட்டேன். அதேபோல் எனக்காக நகைகளை அடமானம் வைத்த அம்மாவுக்கு புதிதாக நகைகளை வாங்கி கொடுத்தேன். முதல் ஐ.பி.எல். தொடரில் கிடைத்த பணம்தான் எனது முதல் சம்பளம். முதல் சம்பளத்திலேயே குடும்பக் கடனை அடைத்தது மகிழ்ச்சி' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Next Story