ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல்..!! சோதனையை சாதனையாக மாற்றி அசத்தல்


ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல்..!! சோதனையை சாதனையாக மாற்றி அசத்தல்
x

Image Courtacy: ICCTwitter

மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார். ஒரு நாள் போட்டியில் இது 2-வது அதிவேக இரட்டை சதமாகும்

மும்பை,

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 39-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் தத்தளித்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்தால் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

இதனிடையே போட்டி நடந்து கொண்டிருந்தபோது சதத்தை எட்டிய அவருக்கு காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் மைதானத்தில் வலியால் உருண்டு புரண்டார். பின்னர் சில நிமிடங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவரை 'ரிட்டயர்ட்ஹர்ட்' வகையில் வெளியேற்றிவிட்டு அடுத்த வீரரான ஆடம் ஜம்பாவை இறக்கவும் ஆஸ்திரேலிய அணிநிர்வாகம் யோசித்தது.

ஆனால் நம்பிக்கை இழக்காத மேக்ஸ்வெல் தன்னால் தொடர்ந்து விளையாட முடியும் என்று கூறினார். ஆஸ்திரேலியாவை கரைசேர்ப்பதற்காக வலியை ஓரங்கட்டிவிட்டு முழுமூச்சுடன் மட்டையை சுழற்றிய 35 வயதான மேக்ஸ்வெல் இறுதியில் இரட்டை சதம், அணி வெற்றி என்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தார்.

மேக்ஸ்வெல் படைத்த மேலும் பல சாதனைகள்:-

* இலக்கை நோக்கி ஆடிய 2-வது பேட்டிங்கில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன் இது தான். இதற்கு முன்பு பாகிஸ்தானின் பஹர் ஜமான், 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 193 ரன்கள் எடுத்ததே சேசிங்கில் ஒரு வீரரின் அதிகபட்சமாக இருந்தது.

* உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு பிறகு இரட்டை சதம் அடித்த 3-வது வீரர் மேக்ஸ்வெல் ஆவார்.

* 52 ஆண்டுகால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவரை 11 இரட்டை சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் மேக்ஸ்வெல் தவிர மற்ற அனைவரும் தொடக்க வீரராக இறங்கி இரட்டை சதம் அடித்தவர்கள் ஆவர். மேக்ஸ்வெல் மட்டுமே 6-வது வரிசையில் நுழைந்து ருத்ரதாண்டவமாடியிருக்கிறார்.

*மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார். ஒரு நாள் போட்டியில் இது 2-வது அதிவேக இரட்டை சதமாகும். இந்தியாவின் இஷான் கிஷன் கடந்த ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 126 பந்துகளில் 200-ஐ தொட்டதே மின்னல்வேக இரட்டை சதமாக நீடிக்கிறது.

* 21 பவுண்டரி, 10 சிக்சருடன் 201 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய வீரர்களில் முதல் இரட்டை சத நாயகன் என்ற அரிய சாதனையை வசப்படுத்தினார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய தரப்பில் ஷேன் வாட்சன் 185 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.

* உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ்கெய்ல் (49 சிக்சர்), இந்தியாவின் ரோகித் சர்மா (45) ஆகியோருக்கு அடுத்த இடத்துக்கு மேக்ஸ்வெல் (43 சிக்சர்) முன்னேறியுள்ளார்.


Next Story