இது மட்டும் நடந்திருந்தால்....போட்டி 18 ஓவரிலே முடிஞ்சிருக்கும்: வெற்றிக்கு பின் தோனி கருத்து
பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் சென்னையை பேட் செய்ய அழைத்தார்.
இதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவான் கான்வேவும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ருதுராஜ் (3 ரன்) ஏமாற்றம் அளித்தார். முகமது சிராஜ் வீசிய பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.
அடுத்து கான்வேவுடன், அஜிங்யா ரஹானே இணைந்தார். இருவரும் பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். ஸ்கோர் 90-ஐ எட்டிய போது (9.3 ஓவர்) ரஹானே 37 ரன்களில் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஹசரங்காவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார்.
3-வது விக்கெட்டுக்கு நுழைந்த ஷிவம் துபேவும் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்டார். மேக்ஸ்வெல் ஓவரில் அவர் தூக்கியடித்த ஒரு பந்து ஸ்டேடியத்தின் மேற்கூரையில் விழுந்தது. அவரது இன்னொரு இமாலய சிக்சர் 111 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. மறுபுறம் கான்வேவும் ரன்மழை பொழிய ரன்ரேட் 10-க்கு மேலாக எகிறியது.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கான்வே 83 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஹர்ஷல் பட்டேலின் யார்க்கரில் போல்டு ஆனார். ஷிவம் துபே தனது பங்குக்கு 52 ரன்கள் (27 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஸ்கோர் 200-ஐ தாண்டுவதற்கு வித்திட்டார். தொடர்ந்து அம்பத்தி ராயுடு 14 ரன்னும், ஜடேஜா 10 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
அடுத்து 227 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் விராட் கோலி 6 ரன்னில் போல்டு ஆனார். அடுத்து வந்த மஹிபால் லோம்ரோர் டக்-அவுட்டில் வீழ்ந்தார்
3-வது விக்கெட்டுக்கு பிளிஸ்சிஸ்சும், மேக்ஸ்வெல்லும் கூட்டணி போட்டு சென்னை பந்து வீச்சை பின்னியெடுத்தனர். ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே, தீக்ஷனா ஓவர்களில் சகட்டுமேனிக்கு சிக்சர்களை தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர்.
இந்த பரபரப்பான கட்டத்தில் மேக்ஸ்வெல் 76 ரன்களில் (36 பந்து, 3 பவுண்டரி, 8 சிக்சர்) தீக்ஷனாவின் சுழற்பந்தை விரட்ட முயற்சித்த போது பந்து மேலே எழும்பியது. அதை டோனி சூப்பராக கேட்ச் செய்தார். அடுத்த ஓவரில் பிளிஸ்சிஸ்சும் (62 ரன், 33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) இதே போல் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் பெங்களூருவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. திரில்லிங்கான இறுதிஓவரை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா வீசினார். கட்டுக்கோப்பாக வீசிய பதிரானா, மாற்று ஆட்டக்காரர் பிரபுதேசாயின் (19 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதுடன் 10 ரன் மட்டுமே வழங்கி வெற்றியை உறுதிப்படுத்தினார்.
பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இந்த நிலையில் வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருப்பதாவது:-
பெங்களூரு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும். இதற்கு தகுந்தார் போல் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும். டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள். நான் விக்கெட் கீப்பராக களத்திற்கு பின்னால் நின்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.
நான் போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன். இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும். எங்கள் அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். நிச்சயமாக இது போன்ற சூழலில் பந்து வீசும் போது அவர்களுக்கு கடினமாக இருக்கும். இருப்பினும் எங்கள் வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பிராவோ கீழ் அவர்கள் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு டோனி கூறினார்.