தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வி: அஸ்வினை மறைமுகமாக விமர்சித்த கவாஸ்கர்


தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வி: அஸ்வினை மறைமுகமாக விமர்சித்த கவாஸ்கர்
x

Image Courtesy: AFP

கவாஸ்கர் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பெர்த்,

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்கா அணி உடன் மோதியது. இந்த போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணி இந்த தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு உதவிய மார்கிராம் சில முறை அவுட்டாவதில் இருந்து தப்பினார். அஸ்வின் ஓவரில் விராட் கோலி எளிதாக பிடிக்கக் கூடிய கேட்சை நழுவவிட்டார். அதேபோல் ரோகித் சர்மா ரன்அவுட் செய்யும் வாய்ப்பை தவறவிட்டார். தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வினை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ''கேட்சை நழுவ விடுவது, ரன்-அவுட் வாய்ப்பை மிஸ் செய்வது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கக் கூடியதுதான். நாம் எந்தவொரு வீரரையும் தோல்விக்காக குற்றம் சுமத்த முடியாது.

அதிர்ஷ்டம் உங்களுடைய பக்கம் இல்லாதபோது, பெரிய வீரர்களும் கேட்ச் பிடிக்க தவறுவார்கள். ரன்அவுட் மிஸ் செய்வார்கள். இந்திய பந்து வீச்சின்போது ஒரு வீரர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தது முக்கிய பிரச்சினை என்று நம்புகிறேன் என்றார்.

இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் நேற்று 3.4 ஓவர்கள் வீசி 21 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களும், முகமது சமி 4 ஓவர்கள் வீசி 13 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களும் விட்டுக் கொடுக்க, அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டு கொடுத்தார்.


Next Story