இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நாக்பூரில் இன்று தொடக்கம்
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது.
நாக்பூர்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்ற வகையிலும், அண்மைகாலமாக இவ்விரு அணிகளும் நீயா-நானா? என்று வார்த்தை போரில் முட்டிக்கொள்வதாலும் இந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை தூண்டியுள்ளது.
இந்திய அணி எப்படி?
இந்தியா உள்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் தொடர்களை வரிசையாக வென்று வீறுநடை போடுகிறது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி உள்ளூரில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அதே ஆதிக்கத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் திட்டங்களை வகுத்துள்ளனர்.
பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா, ரோகித் சர்மா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக மட்டையை சுழற்றும் கோலி இந்த தடவையும் ரன்வேட்டை நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக கே.எஸ்.பரத் இறங்க உள்ளார். பேட்டிங் வரிசையில் 5-வது இடத்திற்கு அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை அணி நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.
அஸ்வின் சுழல்
பந்துவீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படுவார். வறண்டு காணப்படும் இந்த ஆடுகளம் சுழலுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலிய ஊடகங்களின் கூற்றுப்படி இந்த ஆடுகளத்தில் முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பினால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. அதனால் சுழற்படையின் தாக்குதல் தான் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.
குறிப்பாக விதவிதமாக பந்துவீசுவதில் கில்லாடியான அஸ்வின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அப்படியே அவரை போன்று பந்து வீசக்கூடிய ஒரு பவுலரை தேடிப்பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட நிலையில் அஸ்வின் எப்படி தனது சுழல் வித்தையால் எதிரணியை அச்சுறுத்தப்போகிறார் என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும். அவர் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் டெஸ்டில் 450 விக்கெட்டுகளை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
2004-ம் ஆண்டுக்கு பிறகு...
ஆஸ்திரேலிய அணியை எடுத்துக் கொண்டால், கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் தொடர்களை இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது. இதில் தங்கள் நாட்டில் நடந்த இரு தொடர்களும் அடங்கும். 15-வது முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில விளையாடும் ஆஸ்திரேலியா 2004-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு தொடரை ருசித்ததில்லை. அதற்கு எல்லாம் இந்த முறை வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க வரிந்துகட்டுகிறார்கள்.
ஸ்டீவன் சுமித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், வார்னர் என்று ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இதில் கவாஜா, லபுஸ்சேன், ஹெட் ஆகியோர் இந்திய மண்ணில் டெஸ்டில் ஆடப்போவது இதுவே முதல்முறையாகும். இந்திய பந்து வீச்சை தெறிக்கவிட்டு ரன் குவிக்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.
இதே போல் பந்துவீச்சில் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், அனுபவ சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் நிச்சயம் கடும் சவாலாக இருப்பார்கள். பார்ப்பதற்கு ஆஸ்திரேலியா எல்லா வகையிலும் வலுவாக தென்படுவதால் இந்த தொடரில் நிச்சயம் அனல் பறக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது 3 டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். அதனால் அந்த வகையிலும் இந்த தொடர் இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒன்றில் டிரா செய்தாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை உறுதி செய்து விடும்.
அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி 2-0 அல்லது 3-0, 3-1, 4-0 என்ற கணக்கில் தோற்கடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு நம்பர் ஒன் அரியணையில் ஏறும். அவ்வாறு நிகழ்ந்தால், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டியிலும் ஒரே சமயத்தில் 'நம்பர் ஒன்' அணியாக இந்தியா வலம் வரும்.
காலை 9.30 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில், கே.எஸ்.பரத், அஸ்வின், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர் அல்லது டாட் மர்பி, நாதன் லயன், ஸ்காட் போலன்ட்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
சூர்யா அல்லது கில் யாருக்கு இடம்?
- ரோகித் பதில்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவரிடம் ஆடும் லெவன் அணியில் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் இவர்களில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'நாளை (இன்று) டாஸ் போடும் நேரமான காலை 9 மணி வரை காத்திருங்கள்' என்று பதில் அளித்தார். 'சுப்மன் கில் கடந்த 3-4 மாதங்களாக சூப்பர் பார்மில் உள்ளார். நிறைய சதங்கள் அடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் கிரிக்கெட்டில் அசத்துகிறார். இருவருமே தரமான வீரர்கள். யாருக்கு இடம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நிச்சயம் இது கடினமான ஒன்றாகத் தான் இருக்கும். நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதை அறிவோம். அது அணிக்கு நல்ல அறிகுறியாகும். வீரர்கள் தேர்வு என்று வரும் போது, ஆடுகளத்தன்மை, சீதோஷ்ண நிலை, அணியின் தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப லெவனை தேர்வு செய்கிறோம். இங்குள்ள சூழலுக்கு உகந்தபடி வீரர்களின் தேர்வு இருக்கும். இதற்கு தயாராக இருங்கள் என்பதை வீரர்களிடம் தெளிவுப்படுத்தியுள்ளோம்' என்று ரோகித் கூறினார்.
'முதல் இன்னிங்சில் முன்னிலை முக்கியம்'
- கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், ''நாங்கள் முன்பு இங்கு விளையாடிய அணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அணி. அதனால் முந்தைய தோல்விகள் குறித்தோ அல்லது வெற்றிகள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கவில்லை. இது கடினமான தொடர் என்பது தெரியும். இந்தியா உண்மையிலேயே மிகச்சிறந்த அணி. அதுவும் உள்ளூரில் பலம் வாய்ந்தது. நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.
உலகில் எங்கு விளையாடினாலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவது மிகவும் முக்கியம். அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் பட்சத்தில், 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால் முதல் இன்னிங்சிலேயே மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது வெளிநாட்டில் ஆஷஸ் தொடரை வெல்வது போன்றது. இன்னும் சொல்லப்போனால் அரிதானது. இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது கிரிக்கெட் வாழ்க்கையில் மகத்தான சாதனையாக இருக்கும்' என்றார்.
சாதனை துளிகள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் போட்டியில் இதுவரை 102 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 43-ல் ஆஸ்திரேலியாவும், 30-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 28 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. இதில் இருந்து சில சில சாதனை புள்ளி விவரங்களை இங்கு பார்க்கலாம்.
அணியின் அதிகபட்சம்: இந்தியா 705/7 டிக்ளேர் (2004-ம் ஆண்டு, சிட்னி), ஆஸ்திரேலியா 674 (1948-ம் ஆண்டு, அடிலெய்டு)
அணி குறைந்தபட்சம்: இந்தியா 36 ரன் (2020-ம் ஆண்டு, அடிலெய்டு), ஆஸ்திரேலியா 83 (1981-ம் ஆண்டு, மெல்போர்ன்)
அதிக ரன்கள் குவித்தவர்: தெண்டுல்கர் (இந்தியா)- 3,630 ரன்கள் (39 ஆட்டம்), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)-2,555 ரன்கள் (29)
தனிநபர் அதிகபட்சம்: மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா)-329* ரன் (2012-ம் ஆண்டு, சிட்னி) , வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா)- 281 ரன் (2001-ம் ஆண்டு, கொல்கத்தா)
அதிக சதங்கள் அடித்தவர்கள்: தெண்டுல்கர் (இந்தியா) - 11 சதம், ஸ்டீவன் சுமித், பாண்டிங் (ஆஸ்திரேலியா)- தலா 8 சதம்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்: கும்பிளே (இந்தியா) - 111 விக்கெட் (20), நாதன் லயன் (ஆஸ்திரேலியா)- 94 விக்கெட் (22).
மைதான கண்ணோட்டம்
இந்த டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கிறது. இங்கு இதுவரை நடந்துள்ள 6 டெஸ்டுகளில் இந்திய அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இங்கு 2008-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் 172 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் பணிந்தது. இங்கு கடைசியாக 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்டில் இந்தியா 610 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதில் விராட் கோலி இரட்டை சதம் விளாசியதும் அடங்கும். 2015-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்கா 79 ரன்னில் முடங்கியது குறைந்தபட்சமாகும். அதிக ரன்கள் எடுத்தவர்களில் இந்தியாவின் ஷேவாக்கும் (4 டெஸ்டில் 357 ரன்), அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் அஸ்வினும் (3 டெஸ்டில் 23 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்கள்.