ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 10 Sep 2023 12:15 AM GMT (Updated: 10 Sep 2023 12:15 AM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சூப்பர் 4 சுற்று

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பல்லகெலேயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பும்ரா, ராகுல்

உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 48.5 ஓவரில் 266 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும், 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் விக்கெட் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் மட்டும் விக்கெட் கைப்பற்றவில்லை. பீல்டிங் மெச்சும் வகையில் இருக்கவில்லை.

இந்திய அணியின் ரன் குவிப்பு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கிலும் ஒருசேர முன்னேற்றம் காண வேண்டியதும் தேவையான ஒன்றாகும். குழந்தை பிறந்ததால் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து தனது மனைவியை அருகில் இருந்து கவனிக்க மும்பை வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியினருடன் இணைந்து இருக்கிறார். இதேபோல் காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் முழு உடல் தகுதியை எட்டி அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பும்ரா, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புவதால் முகமது ஷமி, இஷான் கிஷனுக்கு இடம் கிடைப்பது கடினம் தான்.

வலுவான பந்து வீச்சு

உலக தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை எளிதில் தோற்கடித்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்கினர். சூப்பர் 4 சுற்றில் 193 ரன்னில் வங்காளதேசத்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பாபர் அசாம், இப்திகர் அகமது, இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வானும், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்பும் நல்ல நிலையில் உள்ளனர். மேகமூட்டமான சூழல் நிலவுவது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

இந்த போட்டி இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையேயான போராக வர்ணிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெருக்கடியை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும்.

மழையால் பாதிக்க வாய்ப்பு

போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஒருநாள் போட்டியை பொறுத்த வரையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 133 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 55-ல் இந்தியாவும், 73-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 14 முறை சந்தித்ததில் 7-ல் இந்தியாவும், 5-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. 2 ஆட்டம் முடிவில்லாமல் போனது.

பிற்பகல் 3 மணிக்கு....

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

பாகிஸ்தான்: பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், பஹீம் அஷரப், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

நல்ல தொடக்கம் காண வேண்டியது அவசியம் -சுப்மன் கில்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நேற்று அளித்த பேட்டியில், 'மற்ற அணிகளுக்கு எதிராக ஆடுவது போல் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கடி விளையாடுவது கிடையாது. அவர்களின் வேகப்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இதுபோன்ற வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாத போது அது முக்கிய போட்டிகளில் சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தான் பவுலர்கள் தனிச்சிறப்பு கொண்ட வித்தியாசமான வேகப்பந்து வீச்சாளர்கள். ஷகீன் ஷா பந்தை அதிகம் ஸ்விங் செய்யக்கூடியவர். நசீம் ஷா அதிக வேகத்தில் பந்து வீசுபவர். அவர்கள் ஆடுகள சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக பந்து வீசி சவால் அளிக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரர்களான நாங்கள் (ரோகித் சர்மா -சுப்மன் கில்) நல்ல தொடக்கம் அளிப்பதுடன், ஆரம்பம் முதலே அவர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். பாகிஸ்தானுக்கு எதிராக முந்தைய ஆட்டத்தில் (ஆசிய கோப்பை லீக் ஆட்டம்) தான் முதல்முறையாக ஆடியதால் நெருக்கடி சற்று அதிகமாக இருந்தது. பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த அணிக்கு எதிராக ஆடினாலும் நெருக்கடி இருக்க தான் செய்யும்' என்று கூறினார்.

இலங்கையில் ஆடிய அனுபவம் அனுகூலம் -பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்று அளித்த பேட்டியில், 'கடந்த 2 மாதங்களாக நாங்கள் இலங்கையில் அந்த நாட்டு அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடரிலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரிலும் விளையாடி இருக்கிறோம். அத்துடன் லங்கா பிரிமீயர் லீக் போட்டியிலும் எங்களது வீரர்கள் ஆடி இருக்கின்றனர். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் எங்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும். எங்களது தொடக்க வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. அதுபோல் இறுதி கட்ட பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. ஆனால் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது எங்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. அதனை சரிசெய்ய முயற்சிகள் எடுத்து வருகிறோம். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் கவனம் செலுத்துகிறோம். சூரியன் ஒளிரும் விதத்தை பார்க்கையில் நாளை (இன்று) அதிக மழை பெய்யாது என்று நினைக்கிறேன்' என்று தெரிவித்தார்.


Next Story