வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 6 Aug 2023 1:47 AM IST (Updated: 6 Aug 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களம் இறங்குகிறது.

2-வது 20 ஓவர் கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் (1-0), மற்றும் ஒருநாள் (2-1) தொடரை வென்றது. இதனையடுத்து இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டிரினிடாட்டில் உள்ள தபோராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் 149 ரன்னுக்குள் வெஸ்ட்இண்டீசை கட்டுப்படுத்தினாலும், அந்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் (6 ரன்), சுப்மன் கில் (3 ரன்) மட்டுமின்றி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல் ஆகியோரும் சொதப்பினர். அறிமுக வீரர் திலக் வர்மா, அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தவிர யாரும் 20 ரன்னை தாண்டவில்லை. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்தியா பதிலடி கொடுக்குமா?

வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் ரோமன் பவெல், நிகோலஸ் பூரன், பிரன்டன் கிங்கும், பந்து வீச்சில் ஒபெட் மெக்காய், ஜாசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் ஹூசைனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியை அபாரமாக கட்டுப்படுத்தி வெற்றி பெற்றதால் வெஸ்ட்இண்டீஸ் அணி நல்ல நம்பிக்கையுடம் களம் இறங்கும். அந்த அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து முன்னிலையை அதிகரிக்க அதிக ஆர்வம் காட்டும்.

அதேநேரத்தில் முதலாவது ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தாங்கள் 'நம்பர் ஒன்' அணி என்பதை நிரூபிக்க இந்திய அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். இதனால் இந்த போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கயானா ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமான விகிதத்தில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 'ஸ்விங்' தாக்குதலுக்கும், போகப்போக சுழற்பந்து வீச்சுக்கும் அனுகூலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

27-வது முறையாக மோதல்

இவ்விரு அணிகளும் இன்று மோதுவது 27-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நேருக்கு நேர் நடந்த 26 ஆட்டங்களில் 17-ல் இந்தியாவும், 8-ல் வெஸ்ட்இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்.

வெஸ்ட்இண்டீஸ்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன், ரோமன் பவெல் (கேப்டன்), ஹெட்மயர், ரொமாரியோ ஷெப்பர்டு, ஜாசன் ஹோல்டர், அகீல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், ஒபெட் மெக்காய்.

இரவு 8 மணிக்கு...

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி.ஸ்போர்ட்ஸ், பொதிகை சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story