இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி: நாளை கடைசி ஆட்டம்..!


இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி: நாளை கடைசி ஆட்டம்..!
x

image courtesy: BCCI twitter

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. தனது 100-வது ஆட்டத்தில் ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் (115 ரன்கள்) சதம் அடித்ததன் மூலம் 100-வது ஆட்டத்தில் சதம் அடித்த 4-வது வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார். கேப்டன் நிகோலஸ் பூரன் 74 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 13 ரன்னிலும், சுப்மான் கில் 43 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 79 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனும், ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 178 ரன்னை எட்டிய போது 11-வது அரைசதம் விளாசிய ஸ்ரேயாஸ் அய்யர் (63 ரன், 71 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அல்ஜாரி ஜோசப் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சஞ்சு சாம்சன் 54 ரன்னில் (51 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதையடுத்து மீண்டும் வெஸ்ட்இண்டீஸ் அணியின் கை ஓங்குவது போல் தெரிந்தது. கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டது.

இந்த சிக்கலான சூழலில் களம் புகுந்த ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் தடாலடியாக மட்டையை சுழற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றியதுடன் அணியை வெற்றிப்பாதையில் பயணிக்க வைத்தார். அவருடன் கைகோர்த்த தீபக் ஹூடா 33 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 3 ரன்னிலும், அறிமுக வீரர் அவேஷ் கான் 10 ரன்னிலும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கைல் மேயர்ஸ் வீசினார். முதல் பந்தில் ரன் வரவில்லை. அடுத்த பந்தில் அக்‌ஷர் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் முகமது சிராஜ் ஒரு ரன் எடுத்தார். கடைசி 3 பந்துகளில் 6 ரன் தேவை என்ற பரபரப்பான சூழ்நிலையில் அக்‌ஷர் பட்டேல் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து சிலிர்க்க வைத்தார்.

49.4 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை சுவைத்தது. வெற்றிகரமாக இலக்கை விரட்டிப்பிடித்த ஆட்டத்தில் கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை திரட்டியது இதுவே முதல்முறையாகும்.

ஹீரோவாக ஜொலித்த அக்‌ஷர் பட்டேல் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 64 ரன் நொறுக்கி களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், 'நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இலக்கு பெரிதாக இருந்தாலும் வீரர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்பட்டது அருமையான விஷயமாகும். ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அக்‌ஷர் பட்டேல் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அறிமுக வீரராக களம் கண்ட அவேஷ் கான் எடுத்த 10 ரன்களும் முக்கியமானதாகும். இதற்கெல்லாம் ஐ.பி.எல். தொடருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஐ.பி.எல்., வீரர்கள் பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கிறது' என்றார்.

தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் நிகோலஸ்பூரன் கருத்து தெரிவிக்கையில், 'இறுதிகட்டத்தில் நாங்கள் பதற்றத்துக்கு உள்ளானோம். கடைசி 6 ஓவர்களில் நெருக்கடியை சரியாக கையாள முடியாமல் போனதால் தோற்றோம். மேலும் ஒரு விக்கெட்டை எடுத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்கலாம். அக்‌ஷர் பட்டேலின் பேட்டிங் அபாரமாக இருந்தது.' என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற அக்‌ஷர் பட்டேல் கூறுகையில், 'முக்கியமான தருணத்தில் வந்த இந்த அரைசதம், தொடரை வெல்லவும் உதவி இருக்கிறது. நான் களம் இறங்கிய போது, ஓவருக்கு 10-11 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஐ.பி.எல். போட்டியில் இதுபோல் ரன் எடுத்த அனுபவம் இருப்பதால் அதனை செய்ய முடியும் என்று நம்பினோம். அதை செய்தும் காட்டியிருக்கிறோம். 2017-ம் ஆண்டுக்கு பிறகு நான் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். மேலும் எனது முதல் அரைசதமும் இந்த போட்டியில் வந்து இருக்கிறது' என்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக 12-வது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடக்கிறது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதாவது ஒரு ஓவரை காலதாமதமாக வீசி முடித்தது. இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதத்தை அபராதமாக விதித்தார். முதல் போட்டியிலும் இதே தவறுக்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story