இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை


இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை
x

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே (பும்ரா-6, ஷமி-3, பிரசித் கிருஷ்ணா-1) சாய்த்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது நிகழ்வாகும்.

இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் முகமது ஷமியின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 151 ஆக (80 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 10 இந்தியர்கள் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் சிறந்த பந்து வீச்சை கொண்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட் (வங்காளதேசத்துக்கு எதிராக 2014) கைப்பற்றி உள்ளார். கும்பிளே (6-12), பும்ரா (6-19), ஆஷிஷ் நெஹரா (6-23), குல்தீப் யாதவ் (6-25), முரளிகார்த்திக் (6-27), அஜித் அகர்கர் (6-42), யுஸ்வேந்திர சாஹல் (6-42), அமித் மிஸ்ரா (6-48), ஸ்ரீசாந்த் (6-55), ஆஷிஷ் நெஹரா (6-59) ஆகியோர் 6 விக்கெட் வீழ்த்திய மற்ற இந்தியர்கள் ஆவர்.


Next Story