உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இது தான் - 15 வீரர்களை தேர்வு செய்த கங்குலி...!
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆசிய அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு எந்த வீரர்களை எல்லாம் தேர்வு செய்யலாம், உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை, சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்பது குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியலை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார். இந்த பட்டியலில் அவர் பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
மேலும், விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவையும் தேர்வு செய்துள்ளார். இறுதியாக வேகப்பந்து வீச்சாளர்களாக ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
இந்த வீரர்களில் யாரேனும் உலகக்கோப்பை தொடரில் இடம் பெற இயலவில்லை என்றால் அவர்களுக்கு மாற்று வீரர்களாக தேர்வு செய்ய திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திரா சாஹல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
கங்குலி தேர்வு செய்த உலகக்கோப்பை அணி விவரம்:- ரோகித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமு, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.
மாற்று வீரர்கள்:- திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திரா சாஹல்