சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி...11 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீராங்கனை - காரணம் என்ன..?
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை 11 ஓவர்கள் பந்துவீசி வினோத சாதனை படைத்துள்ளார்.
காலே,
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 329 ரன்கள் குவித்தது. இதையடுத்து 330 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் நியூசிலாந்து பெண்கள் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீராங்கனை சுழற்பந்து வீச்சாளர் ஈடன் கார்சன் 11 ஓவர்கள் பந்துவீசி ஒரு விசித்திர சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது ஈடன் கார்சன் இந்த ஆட்டத்தில் 7, 9, 17, 19, 21, 23, 31, 33, 43, 45 ஓவர்களை வீசி தனது 10 ஓவர்களை வீசி முடித்தார். ஆனால் அவர் மீண்டும் ஆட்டத்தின் 47 வது வீசியுள்ளார். இந்த தவறு எவ்வாறு நடந்தது என்றால் அவர் வீசிய ஓவரை நடுவர்கள் சரியாக கணக்கிடாமல் இருந்ததால் நடந்துள்ளது.
ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் 10 ஓவர்களும், டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரர் 4 ஓவர்களும் அதிகபட்சமாக வீசலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆட்டத்தில் கார்சென் 11 ஓவர்கள் வீசியுள்ளது அனைவரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்டத்தில் அவர் 11 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
நடுவர்கள் சரியாக கணக்கிடாததே இந்த தவறுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.