சர்வதேச டி20 போட்டி: ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி நேபாள வீரர் அசத்தல்


சர்வதேச டி20  போட்டி: ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி நேபாள வீரர் அசத்தல்
x
தினத்தந்தி 13 April 2024 9:45 PM GMT (Updated: 13 April 2024 9:45 PM GMT)

பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்து வருகிறது

அல் அமிராட்,

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்து வருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம்-கத்தார் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன் மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் (2007-ம் ஆண்டு), வெஸ்ட்இண்டீசின் பொல்லார்ட் (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கவின் கிப்ஸ், அமெரிக்காவின் ஜாஸ்கரன் மல்கோத்ரா ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரித்திரம் படைத்த திபேந்திர சிங் 64 ரன்கள் (21 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20போட்டியில் திபேந்திர சிங் 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஆடிய கத்தார் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 178 ரன்களே எடுத்தது. இதனால் நேபாள அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story