அதிரடியில் மிரட்டல்..! ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்து அசத்தல்..! இந்திய அணி 222 ரன்கள் குவிப்பு


அதிரடியில் மிரட்டல்..! ருதுராஜ் கெயிக்வாட்  சதமடித்து அசத்தல்..! இந்திய அணி 222  ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2023 3:15 PM GMT (Updated: 28 Nov 2023 3:27 PM GMT)

ருதுராஜ் கெயிக்வாட் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார்

கவுகாத்தி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அணி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இஷான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து ருதுராஜ் கெயிக்வாட் நிலைத்து ஆடினார்.

பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் 39 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் ருதுராஜ் கெயிக்வாட் அரைசதம் அடித்தார்.

அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டிய ருதுராஜ் கெயிக்வாட் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுபுறம் திலக் வர்மா சிறப்பாக விளையாடினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெயிக்வாட் 57பந்துகளில் 123ரன்களும் , திலக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 223 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.


Next Story