ஐபிஎல் 2022 : சிறந்த லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் - கோலி, ரோகித் சர்மாவிற்கு இடமில்லை


ஐபிஎல் 2022 : சிறந்த லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் - கோலி, ரோகித் சர்மாவிற்கு இடமில்லை
x

Image Courtesy : IPL / BCCI 

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனின் சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் தேர்வு செய்துள்ளார்.

அகமதாபாத்,

மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். முதல் அணியாக பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டி சென்றுள்ளது.

கடந்த 2 மாதங்களாக கோலாகலமாக நடைபெற்ற ஐபிஎல் திருவிழாவில் பல நட்சத்திர மற்றும் இளம் வீரர்கள் ஜொலித்தனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார்.

அதில் தொடக்க வீரர்களாக இந்த ஐபிஎல் சீசனின் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 2 இடத்தில் இருக்கும் ஜோஸ் பட்லர் மற்றும் கேஎல்ராகுலை அவர் தேர்வு செய்துள்ளார். 3-வது வரிசையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சனை தேர்வு செய்துள்ள ஜாபர் , 4-வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்து கேப்டனாகவும் நியமித்துள்ளார்.

போட்டியை முடித்து கொடுக்கும் வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த அணியில் உள்ளார். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி ஆகியோர் அணியில் உள்ளனர். சுழற்பந்துவீச்சாளர்களாக வனிந்து ஹசரங்கா, மற்றும் யுஸ்வேந்திர சாஹலை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார்.

வாசிம் ஜாபரின் இந்த லெவனை சிறந்த அணி என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான்களாக விளங்கும் கோலி, ரோகித் சர்மா , தோனி போன்ற வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்காத காரணத்தால் அவர்கள் இந்த லெவனில் இடம்பெறவில்லை.

வாசிம் ஜாபர் தேர்வு செய்த அணி :

ஜோஸ் பட்லர், கேஎல்ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.


Next Story