தோள்பட்டை காயம்: நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து லக்னோ வீரர் ஜெயதேவ் உனத்கட் விலகல்


தோள்பட்டை காயம்: நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து லக்னோ வீரர் ஜெயதேவ் உனத்கட் விலகல்
x

image courtesy: PTI

தோள்பட்டை காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து லக்னோ வீரர் ஜெயதேவ் உனத்கட் விலகியுள்ளார்.

லக்னோ,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சீசனில் முன்பு எப்போதும் இல்லாததை விட பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகள் மிகவும் நெருக்கமாக அமைவதால் டாப்-4 இடங்களை பிடிப்பது யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. குறைந்தது 9 வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி 'பிளே-ஆப்' சுற்றை அடைய முடியும்.

இந்த நிலையில் ஐ.பி.எல். திருவிழாவில் இன்று லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள 45-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கின்றன. எஞ்சிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜெயதேவ் பந்தை வீசும்போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயதேவ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவர் வருகிற ஜூன் 7-ம் தேதி லண்டனின் தி ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள்ளாக உடல்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story