ஐ.பி.எல் கிரிக்கெட்: 11-வது ஆண்டாக 'முதல் ஆட்டத்தில் தோல்வி' - மும்பையை தொடரும் சோகம்


ஐ.பி.எல் கிரிக்கெட்: 11-வது ஆண்டாக முதல் ஆட்டத்தில் தோல்வி - மும்பையை தொடரும் சோகம்
x

image courtesy: Mumbai Indians twitter

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை எளிதில் வீழ்த்தியது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 5-வது லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு தொடக்கம் பேரடியாக விழுந்தது. இஷான் கிஷன் (10), அடுத்து வந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் (5 ரன்) இருவரும் பெங்களூரு வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 1 ரன்னில் ( 10 பந்து) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திடம் சிக்கினார். அதற்கு முன்பாக ரோகித் சர்மாவுக்கு கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக்கும், பந்து வீசிய முகமது சிராஜிம் மோதிக்கொண்டதால் நழுவிப் போனது. ஆனால் கிடைத்த அதிர்ஷ்டத்தை ரோகித் பயன்படுத்த தவறினார். சூர்யகுமார் யாதவும் (15 ரன்) ஜொலிக்கவில்லை. அப்போது மும்பை அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (8.5 ஓவர்) இழந்து ஊசலாடியது.

இந்த நெருக்கடியான சூழலில் 5-வது வரிசையில் ஆட வந்த இளம் வீரர் திலக் வர்மா தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டு அணியை சரிவில் இருந்து மீட்டார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்திய அவர் ரன்ரேட்டை படிப்படியாக உயர்த்தினார். அவருக்கு நேஹல் வதேரா (21 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தார்.

கடைசி கட்டத்தில் 20 வயதான திலக் வர்மாவின் தடாலடியான பேட்டிங்கால் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. தனது முதல் 3 ஓவர்களில் 5 ரன் மட்டுமே வழங்கி பிரமாதப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆட்டத்தின் 19-வது ஓவரில் 5 வைடு வீசியதுடன் 2 பவுண்டரியும் விட்டுக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஹர்ஷல் பட்டேலின் கடைசி ஓவரில் 2 சிக்சர்கள் பறந்தன.

20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ஐதராபாத்தை சேர்ந்த திலக் வர்மா 84 ரன்களுடனும் (46 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), அர்ஷத் கான் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் 60 ரன்கள் சேர்த்தனர். பெங்களூரு தரப்பில் கரண் ஷர்மா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, ஆகாஷ் தீப், ஹர்ஷல் பட்டேல், பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும், விராட் கோலியும் மும்பையின் பந்து வீச்சை துவம்சம் செய்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அரைசதம் கடந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் திரட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். பிளிஸ்சிஸ் 73 ரன்களில் (43 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய தினேஷ் கார்த்திக் டக்-அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து கோலி பவுண்டரி, சிக்சருடன் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 45-வது அரைசதத்தை பூர்த்தி செய்த விராட்கோலி 82 ரன்களுடனும் (49 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), மேக்ஸ்வெல் 12 ரன்களுடனும் (2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல்-ல் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு சீசனிலும் தங்களது முதல் ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. அந்த மோசமான வரலாற்றை இந்த முறையும் அவர்களால் மாற்ற முடியவில்லை. தொடர்ந்து 11-வது ஆண்டாக அவர்களை 'முதல் ஆட்டத்தின் தோல்வி' துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டிருக்கிறது.


Next Story