ஐ.பி.எல். 2024; ரசலைப் போல கொல்கத்தா அணிக்காக ஆடி போட்டிகளை வெல்ல விரும்புகிறேன் - இளம் வீரர் நம்பிக்கை


ஐ.பி.எல். 2024; ரசலைப் போல கொல்கத்தா அணிக்காக ஆடி போட்டிகளை வெல்ல விரும்புகிறேன் - இளம் வீரர் நம்பிக்கை
x

கோப்புப்படம்

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

கொல்கத்தா,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகிறது.

கடந்த சில சீசன்களாகவே ஐ.பி.எல் தொடரில் அறிமுக வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் இந்த தொடரிலும் இளம் வீரர்கள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடரில் 26 வயதே ஆன ஆல் ரவுண்டரான ரமன்தீப் கொல்கத்தா அணிக்காக தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பெயர் ஏலத்திற்காக வந்தபோது நான் தொலைக்காட்சியை ஆப் செய்து விட்டேன்.

பின்னர், சிறிது நேரத்தில் எனக்கு அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் எனது குடும்பத்திடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்து வந்தது. அப்போதுதான் நான் கொல்கத்தா அணிக்காக தேர்வாகியது தெரிய வந்தது. கே.கே.ஆர். என்னை வாங்குவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அதேபோல நடந்தது.

அவர்களைப் பற்றி நான் நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அவர்கள் ஒரு சிறந்த அணி என்றும், வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் என்றும், வீரர்களின் திறமையை வளர்ப்பவர்கள் என்றும், தரமான பயிற்சியை அளிப்பவர்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன். இதனால், கொல்கத்தா அணிக்காக தேர்வாகியிருப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஆரம்பத்தில் இருந்தே ரசலைப் பின்தொடர்ந்து வருகிறேன். அவர் எப்படி டி20-யில் பேட்டிங் மற்றும் பவுலிங் தாக்கத்தை உருவாக்குகிறார் என்பதை பார்த்திருக்கிறேன். நான் பேட்டிங் செய்யும்போது எல்லாம் இந்த சூழலில் ரசல் என்ன செய்வார் என்று யோசித்து அதுபோல செயல்படவே முயற்சிக்கிறேன்.

பவுலிங்கிலும் ரசல் மிகவும் கடினமான ஓவர்களை வீசுவார். கொல்கத்தா அணிக்காக ரசல் பல போட்டிகளை வென்றுள்ளார். ரசலைப் போல கொல்கத்தா அணிக்காக ஆடி போட்டிகளை வெல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story