ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று சந்திப்பு


ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று சந்திப்பு
x

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-பஞ்சாப் அணிகள் சந்திக்கின்றன.

டெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி, சென்னையிடம் வீழ்ந்ததால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது. இருப்பினும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க அந்த அணி முயற்சிக்கும். அந்த அணியில் பேட்டிங்கில் வார்னர், அக்ஷர் பட்டேல் தவிர யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.

பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷிகர் தவான், ஜிதேஷ் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், நாதன் எலிஸ், சாம் கர்ரன், ஹர்பிரீத் பிராரும் பலம் சேர்க்கிறார்கள். முந்தைய இரண்டு ஆட்டங்களில் மும்பை, கொல்கத்தாவிடம் அடுத்தடுத்து உதை வாங்கிய பஞ்சாப் அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகள் இடையிலான மோதலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 30 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு அணிகளும் தலா 15 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளன.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.


Next Story