ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்துள்ளது.
பெங்களூரு,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க அணியின் கேப்டன் நிதிஷ் ராணா களமிறங்கினார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜேசன் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம்(56 ரன்கள்) விளாசினார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய நிதிஷ் ராணா 48 ரன்களில் ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார். இறுதியில் ரிங்கு சிங் மற்றும் டேவிட் வைஸ் களத்தில் இருக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது.