ஐ.பி.எல். கிரிக்கெட்: ஆறுதல் வெற்றியுடன் விடைபெறுமா சென்னை?

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. ரன்-ரேட்டில் நல்ல நிலையில் இருக்கும் அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு (பிளே-ஆப்) ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இருப்பினும் உத்வேகத்தை தொடர்வதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி தனது நிலையை வலுப்படுத்தி கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தும். ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் (3 சதம், 3 அரைசதம் உள்பட 627 ரன்கள்) கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததை முன்னிட்டு சொந்த நாட்டுக்கு சென்றதால் கடந்த 2 ஆட்டங்களை தவற விட்ட அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (24 விக்கெட்), பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின், குல்தீப் சென் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அதிக முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி ஒரு முறை கூட கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது கிடையாது. இதனால் அந்த அணி புள்ளிபட்டியலில் மேலும் கீழே இறங்கிவிடக்கூடாது என்ற மனநிலையுடன் இருக்கும். அத்துடன் முந்தைய 2 லீக் ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி கண்ட சென்னை அணி ஆறுதல் வெற்றியுடன் விடைபெற வியூகம் வகுக்கும். வலுவான நிலையில் இருக்கும் ராஜஸ்தான் அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும்.






