ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? - தகுதி சுற்றில் குஜராத்-மும்பை இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? - தகுதி சுற்றில் குஜராத்-மும்பை இன்று மோதல்
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்றில் குஜராத்-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. தோல்வி அடைந்தாலும் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த வகையில் குஜராத்துக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை பதம்பார்த்து 2-வது தகுதி சுற்றை அடைந்தது.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும் மல்லுக்கட்டுகின்றன. இதில் வாகை சூடும் அணி 28-ந்தேதி நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும்.

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றில் 10 வெற்றி 4 தோல்வியுடன் கம்பீரமாக முதலிடம் பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் சென்னையிடம் நெருங்கி வந்து தோற்ற குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது.

குஜராத் அணியில் சுப்மன் கில் (2 சதம், 4 அரைசதத்துடன் 722 ரன்) ரன்குவிக்கும் எந்திரமாக மாறிவிட்டார். அவரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இதே போல் விஜய் சங்கர் (3 அரைசதத்துடன் 301 ரன்), விருத்திமான் சஹா (299 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் 'அதிரடி மன்னன்' டேவிட் மில்லர் இந்த சீசனில் இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் கைகொடுத்தால் நெருக்கடி குறையும். பந்துவீச்சில் ரஷித்கான் (25 விக்கெட்), முகமது ஷமி (26 விக்கெட்), மொகித் ஷர்மா (19 விக்கெட்) மிரட்டுகிறார்கள். உள்ளூர் சூழல் குஜராத்துக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும். இந்த சீசனில் இங்கு 7 லீக்கில் ஆடி அதில் 4-ல் வெற்றி கண்டுள்ளது.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 லீக் ஆட்டங்களில் தோற்று மந்தமாக தொடங்கினாலும் சரியான நேரத்தில் எழுச்சி பெற்று விட்டது. சூர்யகுமார் யாதவ் (ஒரு சதம், 4 அரைசதத்துடன் 544 ரன்), ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் (422 ரன் மற்றும் 6 விக்கெட்) சூப்பர் பார்மில் உள்ளனர். குஜராத்தின் 'சுழல் சூறாவளி' ரஷித்கானை சமாளிப்பதில் சூர்யகுமார் கில்லாடி. ஐ.பி.எல். போட்டிகளில் அவரிடம் ஒரு முறை கூட ஆட்டமிழக்காத சூர்யகுமார் அவரது பந்து வீச்சில் 47 பந்தில் 67 ரன்கள் எடுத்துள்ளார். அவ்வப்போது நன்றாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்தாலே மும்பையின் கை ஓங்கி விடும்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ்சாவ்லா (15 ஆட்டத்தில் 21 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் (7 ஆட்டத்தில் 13 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் 7-வது முறையாக இறுதிசுற்றை எட்டும்.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் வரிந்துகட்டுவதால் கோலோச்சப்போவது யார்? என்பதை கணிப்பது கடினம். ஆடுகளத்தை பொறுத்தவரை இங்கு 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களின் ஜாலம் மேலோங்கி இருக்க வாய்ப்புள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், விருத்திக் ஷோகீன் அல்லது நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா.

குஜராத்: சுப்மன் கில், விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், சாய் சுதர்சன் அல்லது அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித்கான், நூர் அகமது, ஜோஷ் லிட்டில் அல்லது யாஷ் தயாள், மொகித் ஷர்மா, முகமது ஷமி.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

''குஜராத் அணி வீரர் சுப்மன் கில் 722 ரன்களுடன், நடப்பு தொடரில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். இன்னும் 9 ரன் எடுத்தால் பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ்சை (730 ரன்) பின்னுக்கு தள்ளி ஆரஞ்சு நிற தொப்பியை சொந்தமாக்கி விடுவார்''

''இந்த சீசனில் மும்பை, குஜராத் அணிகள் இலக்கை நோக்கி (சேசிங்) ஆடிய 9 ஆட்டங்களில் தலா 6-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் சேசிங்கில் அசத்தலாக செயல்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் 'டாஸ்' வெல்லும் அணி 2-வது பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புள்ளது''


Next Story