ஐ.பி.எல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா லக்னோ? - இன்று மோதல்


ஐ.பி.எல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா லக்னோ? - இன்று மோதல்
x

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

மொகாலி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் மும்பையை 13 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் பஞ்சாப் வீரர்கள், கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். தோள்பட்டை காயத்தால் கடந்த 3 ஆட்டங்களில் ஆடாத கேப்டன் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ள பஞ்சாப் அணிக்கு உள்ளூரில் ஆடுவது சாதகமான அம்சமாக இருக்கும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் 4-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 8 புள்ளிகளுடன் இருக்கிறது. குஜராத் டைட்டன்சுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 136 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் லக்னோ 128 ரன்னில் அடங்கியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் லோகேஷ் ராகுல் (262 ரன்), கைல் மேயர்ஸ் (243 ரன்) சிறப்பாக விளையாடி வந்தாலும் மிடில் வரிசை பேட்டிங் சீராக இல்லை. அதை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே இந்த சீசனில் பஞ்சாப்பிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கிய லக்னோ அதற்கு பதிலடி கொடுக்க வரிந்துகட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா


Next Story