புஜாராவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதா..? - ஸ்டூவர்ட் பிராட் கேள்வி


புஜாராவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதா..? - ஸ்டூவர்ட் பிராட் கேள்வி
x

கோப்புப்படம்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது.

ராஞ்சி,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42 ரன், டக்கட் 11 ரன், போப் 0 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் பேர்ஸ்டோ 38 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், போக்ஸ் 47 ரன், ஹார்ட்லி 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராபின்சன் களம் இறங்கினார்.

நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது முதல் சதம் இதுவாகும். இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன், கில் 38 ரன், படிதார் 17 ரன், சர்பராஸ் கான் 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜூரெல் 30 ரன், குல்தீப் யாதவ் 17 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி இல்லாத இந்த தொடரில் இது போன்ற சூழ்நிலைகளில் நங்கூரமாக விளையாடக்கூடிய புஜாரா இந்திய அணியில் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக ஸ்டுவர்ட் பிராட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அனுபவம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி இல்லாத சூழ்நிலையில் இந்த இந்திய பேட்டிங் வரிசையில் புஜாராவை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆர்வம் ஏற்படுவில்லையா? அல்லது அவருடைய சர்வதேச கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதா?. அவரால் தற்போதைய இந்திய அணியில் நங்கூரமாக மற்றும் நிலைத் தன்மையையுடன் விளையாடும் அணுகு முறையை ஏற்படுத்த முடியும் என்று தோன்றுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story