'கோலியிடம் இருந்து பாபர் அசாம் சீருடையை வாங்கியது தவறு' - பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்
கோலியிடம் இருந்து சீருடையை பெற்ற பாபர் அசாமுக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்,
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.
போட்டி முடிந்த பிறகு இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டோகிராப் போட்ட தனது சீருடையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு பரிசாக வழங்கினார். இதில் பாபர் அசாம் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்ரம் கூறுகையில், 'மோசமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளான நிலையில், மைதானத்தில் எல்லோர் முன்னிலையில் கோலியிடம் இருந்து பாபர் அசாம் பனியனை வாங்கியது தவறு. இதை செய்வதற்குரிய நாள் இதுவல்ல. உங்களது மாமா மகன் கோலியிடம் இருந்து 'டி சர்ட்' வாங்கிவரும்படி கேட்டு இருந்தால், ஆட்டம் முடிந்த பிறகு வீரர்களின் ஓய்வறைக்கு சென்று பெற்றிருக்க வேண்டும். உங்களது தனிப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக செய்திருக்க கூடாது' என்றார்.