ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்


ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 30 Jan 2024 12:30 AM GMT (Updated: 30 Jan 2024 12:30 AM GMT)

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

புளோம்பாண்டீன்,

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முறையே முதல் 3 இடங்களை பெற்ற இந்தியா வங்காளதேசம், அயர்லாந்து (ஏ பிரிவு), தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் (பி பிரிவு), ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே (சி பிரிவு), பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் (டி பிரிவு) ஆகிய அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு தகுதி பெற்ற 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், நேபாளம், அயர்லாந்து ஆகிய அணிகளும், மற்றொரு பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குள் முன்னேறிய அணிகளுக்கு எதிராக ஏற்கனவே லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் பெற்ற வெற்றிக்குரிய புள்ளி நிகர ரன்ரேட்டுடன் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அத்துடன் லீக்கில் ஒரு பிரிவில் முதலிடம் பிடித்த அணி மற்றொரு பிரிவில் 2-வது, 3-வது இடத்தை பிடித்த அணிகளுடன் மோதும் வகையில் சூப்பர் சிக்ஸ் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி தனது 'சூப்பர் சிக்ஸ்' சுற்று ஆட்டங்களில் 'டி' பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து, 3-வது இடம் பெற்ற நேபாளம் ஆகிய அணிகளுடன் மோதுகிறது. மற்றபடி வித்தியாசமான போட்டி அட்டவணை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம் பெற்றும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) புளோம்பாண்டீனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 'சூப்பர் சிக்ஸ்' சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை துவம்சம் செய்து 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்த உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.


Next Story