கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தல்..! நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 612 ரன்கள் குவித்து டிக்ளேர்..!


கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தல்..! நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 612 ரன்கள் குவித்து டிக்ளேர்..!
x

சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் இரட்டைசதம் அடித்து அசத்தினார்.

கராச்சி,

பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் (78 ரன்), டிவான் கான்வே (82 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று சலனமற்ற இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் ரன்வேகம் மந்தமாகவே இருந்தது. ஸ்கோர் 183 ஆக உயர்ந்த போது, கான்வே 92 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானம் காட்டினார். மறுமுனையில் தனது 13-வது சதத்தை எட்டிய டாம் லாதம் 113 ரன்களில் (191 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

ஹென்றி நிகோல்ஸ் (22 ரன்), டேரில் மிட்செல் (42 ரன்), விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் (47 ரன்), பிரேஸ்வெல் (5 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் நடையை கட்டினர். இதற்கு மத்தியில் நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய வில்லியம்சன் தனது 25-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 136 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 440 ரன்கள் குவித்து 2 ரன் முன்னிலை பெற்றிருக்கிறது. வில்லியம்சன் 105 ரன்களுடனும் (222 பந்து, 11 பவுண்டரி), சோதி ஒரு ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர் . இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது .

தொடர்ந்து வில்லியம்சன், சோதி இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தனர். இஷ் சோதி அரைசதம் அடித்து 65 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் இரட்டைசதம் அடித்து அசத்தினார். இது டெஸ்டில் அவரது 5வது இரட்டை சதம் ஆகும் .

பின்னர் 194.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்கள் எடுத்தபோது நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்த்து. வில்லியம்சன் 395 பந்துகளில் 200 ரன்கள் ( 21 பவுண்டரி , 1 சிக்சர் )ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Next Story