லபுஷேன் அபாரம்..!! 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி


லபுஷேன் அபாரம்..!! 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி
x

Image Courtacy: ICCTwitter

தினத்தந்தி 7 Sep 2023 6:27 PM GMT (Updated: 7 Sep 2023 6:29 PM GMT)

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஓயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பவுமா 142 பந்துகளில் 114 ரன்கள் குவித்து அசத்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மார்கோ ஜான்சன் 32 (40 ) ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹெசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்ரோய்னிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 17 ரன்களும், ஜோஸ் இங்லீஸ் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் 33 (28) ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, மார்னஸ் லபுஷேன் மற்றும் அஸ்டான் அகார் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் லபுஷேன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

முடிவில் மார்னஸ் லபுஷேன் 80 (93) ரன்களும், அஷ்டான் அகார் 48 (69) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 40.2 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இதன்படி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.


Next Story