கடைசி டி-20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் 'டாஸ்' கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த திலக் வர்மா(0) ரன் ஏதுமின்றி கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசி அசத்தினார். ஜெய்ஸ்வால் அரைசதத்தைக் கடந்து, 60 ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.