கடைசி டி20: சதம் விளாசி மிரட்டிய ரைலி ரூசோவ்- தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் குவிப்பு


கடைசி டி20: சதம் விளாசி மிரட்டிய ரைலி ரூசோவ்- தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் குவிப்பு
x

Image Tweeted By @ProteasMenCSA

இந்திய அணிக்கு 228 ரன்கள் இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.

இந்தூர்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் பவுமா மற்றும் டி காக் களமிறங்கினர்.

இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் சோபிக்காத பவுமா இந்த போட்டியிலும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதை தொடர்ந்து டி காக் உடன் ரைலி ரூசோவ் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேவை நன்கு பயன்படுத்தி ரன்கள் குவிக்க தொடங்கிய இந்த ஜோடி பவர்பிளே முடிந்த பிறகு பவுண்டரி மழைகளை பொழிந்தனர். நடு ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு டி காக்- ரைலி ரூசோவ் விடம் எடுபடவில்லை. சிறப்பாக ஆடிய டி காக் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி 12.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருந்த போது ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான பீல்டிங்கால் டி காக் ரன் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டப்ஸ் களம் புகுந்தார்.

அதிரடியை தொடர்ந்து வந்த ரைலி ரூசோவ் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஒருமுனையில் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ரூசோவ் இமாலய சிக்சர்களை விளாசி வந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் கணக்கு வெகுவாக உயர்ந்தது. கடைசி ஓவரில் ரூசோவ் 48 பந்துகளில் சதம் கடந்தார். இது சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அவரின் முதல் சதமாகும்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் தரப்பில் உமேஷ், தீபக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.


Next Story